பெண்களின் அமைதியான தியாகம் – வீட்டு வாழ்க்கையின் மறைக்கப்பட்ட பக்கம்
Table of Content
பெண்களின் அமைதியான தியாகம் – வீட்டு வாழ்க்கையின் மறைக்கப்பட்ட பக்கம்
"காலை சாப்பாடு செய்யல… இன்று வேலைக்குப் போக வேண்டியதில்லையாம்…"
இந்த ஒரு வார்த்தைதான் எனக்கு இன்று பல விஷயங்களை நினைவூட்டிவிட்டது. வீட்டில் இருந்த மாவை வைத்து இட்லி, தோசை தயாரித்து வைத்து, வேலைக்குப் போனவள் என் வாழ்க்கைத்துணை. ஆனால் நானோ, அரிசியை மட்டும் பாத்திரத்தில் போட்டு, ஒரு கலவையான காய்கறி சாம்பாரை வைத்ததற்குப் பிறகு, 'ரசம் வேணாமா?' என்ற எண்ணத்துடன் காலம் கழிக்கிறேன்.
இந்த ஒரு நாள் அனுபவம்தான், அவர் தினமும் சுமக்கும் சுமையை சிறிதளவு உணரச் செய்தது.
வீட்டுப் பெண்கள் – நம்பிக்கையோடும் பொறுமையோடும் நிறைந்தவர்கள்
தினமும் அதிகாலையில் எழுந்து, குழந்தைகள் பள்ளிக்குத் தயாராக, கணவன் வேலைக்குப் போக, வீட்டை சுத்தம் செய்து, சமையல் செய்து, எல்லாமும் நேரம் தவறாமல் செய்வது அவர்களுக்குத்தான் கடமை. அதிலும், அவர்கள் வேலைக்கும் கிளம்புகிறார்கள் என்றால், அது மிகப்பெரிய அற்புதம்.
நாம் வெளியே சென்று வேலை செய்கிறோம் என்பதற்கே பெருமையாக பேசுகிறோம். ஆனால் அவர்களிடம் "நீ என்ன பண்ற?" என்று கேட்டால், வெறுமனே "வீட்டில்தான் இருக்கேன்" என்பதுபோல், சமாதானமாக பதில் சொல்கிறார்கள். ஆனால் அந்த வீட்டிற்குள் அவர்கள் செய்வதற்கு அளவே இல்லை.
பார்க்க முடியாத தியாகங்கள்
அவர்களுக்கு உடல் வலிக்கலாம், சோர்வாக இருக்கலாம் – ஆனால் அதையெல்லாம் அவர்கள் வெளிக்காட்டமாட்டார்கள். நமக்குத் தேவையானதை எப்போதும் கேட்பார்கள்: "உனக்கு என்ன சாப்பாடு வேணும்?" என்ற கேள்வியே அவர்களுடைய அன்பும் தியாகமும் நிறைந்த உதாரணம்.
நாம் மறந்து போன நன்றி சொல்லும் பழக்கம்
நாம் எப்போதாவது நேரில் நன்றி சொல்லுகிறோமா? “நீ எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு, வேலைக்குப் போற” என்று ஒருமுறை கேட்டிருக்கிறோமா? சொல்ல மாட்டோம். அதற்கு பதிலாக, யாராவது வெளிப்பட்டவரிடம் சொல்வோம்: "என் மனைவி ரொம்ப நேர்த்தியானவங்க… எல்லா வேலையும் பார்த்துட்டு வேலைக்கும் போறாங்க" என்று. ஆனா அவர்களிடம் நேரடியாக பாராட்ட முடியாது. ஏன்? மனதில் தடையா? இல்லையென்றால், பழக்கமில்லையா?
கடைசியாக – மனசுல சொல்லுறதை வாயால சொல்லணும்
அவர்களும் நம்மைப் போலவே மனிதர்கள். நம்மைப் போலவே அவர்களுக்கும் பாராட்டும், அன்பும் தேவை. “நீ பண்ணுற வேலை, தியாகம், எல்லாமே வியக்கத்தக்கது” என்ற ஒரு வார்த்தை – அவர்களுக்குள் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உண்டாக்கும்.
அந்த ஒரு பாராட்டு வார்த்தை, ஒரு உதவியாய் எதையாவது செய்தல், ஒரு சிறிய உதவியாயினும் செய்ய நேர்ந்தால் அது ஒரு நாள் மட்டும் இல்ல, அவர்களுடைய வாழ்நாளெல்லாம் நம்மை மனதில் வைத்துக் கொள்வதற்கே போதுமானதாகும்.
COMMENTS